Tuesday, January 4, 2011

தென்னைக்கு நடுவே தித்திக்கும் தீவனப்பயிர்!

வயது 90 நாட்கள்.



தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் விதைக்கலாம்.


வேலைப்பளு இல்லாத விவசாயம்.
கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனம் உற்பத்தி மிக அத்தியாவசியமானது. பால் உற்பத்தியைப் பெருக்கும் தீவனப்பயிரான நாட்டுச்சோளத்தை தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்து வருகிறார், திருப்பூர் மாவட்டம், நந்தவனப்பாளையம், பெரியத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி.



கனமழை தந்து போன சொதசொதப்பையும் மீறி வரப்பில் நின்று கொண்டு தோட்டத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த பழனிசாமியைச் சந்தித்தோம்.


''கடந்த 20 வருஷத்துக்கு முன்ன வரைக்கும் எங்க பகுதியில, விவசாய நிலத்தைவிட, மேய்ச்சல் நிலங்கள் அதிகமா இருந்தது. பம்ப்செட் மோட்டார் வந்த பிறகு, மேய்ச்சல் நிலங்கள், படிப்படியா விளைநிலங்களா மாறிடுச்சு. மேய்ச்சல் நிலம் குறைஞ்சதால, அதுல மானாவாரியா மழைக் காலத்தில் விதைச்சுட்டு வந்த சோளம், கம்பு, கொள்ளு மாதிரியான தீவனப்பயிர் சாகுபடியும் குறைஞ்சி, கால்நடைகளும் குறைஞ்சு போச்சு.


இந்த நிலைமையில ஆள்பற்றாக்குறை, கட்டுப்படியாகாத விலைனு பல பிரச்னைகளால நான் தென்னை விவசாயத்துக்கு மாறிட்டேன். நாலு ஏக்கர்ல 280 தென்னை மரங்களை நட்டு, நாலு வருஷமாச்சு. போன வருஷம் வரைக்கும் இளம் தென்னைக்குள்ள வெங்காயம், மிளகாய், மக்காச்சோளம்னு ஊடுபயிர் சாகுபடி செய்துட்டு இருந்தேன்.


பசுந்தீவனந்தான் பாலைக் கூட்டுது!
நாலு கறவை மாடுகளை வெச்சு பாலை உற்பத்தி செய்றேன். என்னதான் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்புத் தீவனம்னு கொடுத்தாலும், பசுந்தீவனம் கொடுத்தாதான் பாலோட அளவு கூடுது. அதுவும் கோடைக் காலத்தில் பசுந்தீவனம் கொடுக்கலைனா பால் ரொம்ப குறைஞ்சிடும். அதனால, மாட்டுக்குத் தேவையான தீவனத்துக்காக நாட்டுச்சோளத்தை தென்னைக்கு ஊடுபயிரா விதைச்சிருக்கேன்'' என்றவர் தென்னைக்கு இடையில் நாட்டுச்சோளம் சாகுபடி செய்யும் முறை பற்றி சொல்லத் தொடங்கினார்.
விதைப்பு, அறுவடை மட்டும்தான்!
நாட்டுச்சோளத்தை தனிப்பயிராகவும் விதைக்கலாம், மத்த பயிர்களுக்கு இடையில் ஊடுபயிராகவும் விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து மாட்டுவண்டி தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து, உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதைச்சோளத்தை கைகளால் வீசி விதைத்துவிட வேண்டும். மீண்டும் ஒரு உழவு செய்யவேண்டும். இரண்டு அல்லது மூன்று தண்ணீர் கொடுத்தால் போதும்... பயிர் வளர்ந்து விடும். நாட்டுச்சோளத்தைப் பொறுத்தவரை உழுது, விதைப்பதைத் தவிர வேறு எந்த வேலைபாடும் தேவைப்படாது... அடுத்தது அறுவடைதான்!
100 நாட்களுக்குள் அறுவடை!
சோளத்தின் வயது 90 நாட்கள். வடிகால் வசதி உள்ள அனைத்து மண்ணிலும் வளரும். இதற்குத் தனியாக எந்தப் பட்டமும் இல்லை. விதைத்த 70 நாட்களில் கதிர்களில் பால் பிடிக்கும். பசுந்தீவனமாக கொடுக்க நினைப்பவர்கள், இந்த நிலையிலேயே தட்டைகளை அறுத்து துண்டுகளாக வெட்டி மாடுகளுக்குக் கொடுக்கலாம். 90 முதல் 100 நாட்களுக்குள் மீதமுள்ள தட்டைகளில் உள்ள முதிர்ந்த சோளக் கதிர்களை அறுவடை செய்துகொண்டு, தட்டையை அடியோடு அறுத்து, சின்னசின்னக் கட்டுகளாகக் கட்ட வேண்டும். பிறகு, இந்த கட்டுகளை நிலத்தில் கூம்பு போல நட்டு வைத்து, ஒரு மாதம் வரை நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும். ஒரே இடத்தில் சோளத் தட்டைகள் மண்ணில் ஊன்றி நின்றால், கரையான் பிடித்துவிடும் வாய்ப்பு உண்டு. எனவே, அடிக்கடி கட்டுகளைத் தட்டி உலர்த்தி இடம் மாற்றி வைக்கவேண்டும்.


அறுவடை செய்த சோளக் கதிர்களைக் காய வைத்து குச்சியால் அடித்து மணியைப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஏக்கருக்கு சுமார் 300 கிலோ சோளம் கிடைக்கும். தீவனச்சோளமாக இருப்பதால், தரமும் மகசூலும் குறைவாகவே இருக்கும். இதை மூட்டை பிடித்து வைத்துக் கொண்டு, மாவாக அரைத்து காய்ச்சி, கறவை மாடுகளுக்கு தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். நாமும் தோசை, பலகாரம் என சமைத்து சாப்பிடலாம்.
3 டிராக்டர் தீவனம்!
தட்டை நன்றாக காய்ந்த பிறகு, நமக்கு வசதியான இடத்தில் கல், மரங்கள் கொண்டு 2 அடி உயரம், 15 அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட பட்டறை (போர்) அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் மீது சோளத்தட்டைக் கட்டுகளை இரண்டாக வெட்டி, ஒரே சீராக அடுக்கிக் கொள்ள வேண்டும்.
காய்ந்த சோளத் தட்டைகளை இப்படி போர் போட்டு வைத்து கொண்டால், மழைக்காலங்கள், தீவனப் பற்றாக்குறை ஏற்படும் வறட்சிக் காலங்கள் போன்ற சமயங்களில் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.
சாகுபடி தொழில்நுட்பம் சொல்லி முடித்த பழனிசாமி, ''ஒரு ஏக்கருக்கு மூணு டிராக்டர் அளவுக்கானத் தீவனம் கிடைக்கும். 'மேய்ச்சல் நிலம் இல்லையே'னு கவலைப்பட்டுக்கிட்டு யாரும் கால்நடை வளர்ப்பைக் கைவிடணும்கிற தேவையில்ல. இளம் தென்னையா இருந்தா... சோளம், வளர்ந்த தென்னையா இருந்தா... தீவனப்புல் இதையெல்லாம் ஊடுபயிரா போட்டு, பால் உற்பத்தியைப் பெருக்கலாம்'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.
நன்றி விகடன்






Monday, January 3, 2011

பூச்சிக்கொல்லிக்கு வேலையில்லை!

இரைவிழுங்கி, ஒட்டுண்ணி, நோய் பரப்பும் காரணிகள்னு சொல்லப்படுற வரிசையில... இயற்கையாவே பூச்சிகளுக்கு எதிரிகளா இருக்கற காக்கா, கொக்கு, குருவி, மைனா, ஆந்தை, கரிச்சான், பாம்பு, பல்லி, தவளை, ஓணான் மாதிரியான உயிர்களைப் பத்தி பாக்கப் போறோம்.
வயல்ல பூச்சிகள சமநிலையில வெக்குறதுல மேலே சொன்ன ஜீவன்களோட பங்கு முக்கியமானது. நிலத்தை உழும்போது, மண்ணுக்கு அடியில கூட்டுப்புழு, முட்டைனு பல நிலைகள்ல இருக்கறப் பூச்சிகளோட வெவ்வேறு பருவம், மண்ணுக்கு மேல வரும்.
டிராக்டருக்கு பின்னால வரிசை கட்டி வர்ற கொக்கு, மைனா மாதிரியான பறவைங்க அந்தப் பூச்சிகள பிடிச்சு அழிச்சுடும்.மேற்படி பறவை இனங்கள, பயிர் பாதுகாப்பு விஷயத்துல கொண்டு வரலாம்ங்கறதுக்கான ஆரம்பம்தான்... நெல் வயல்கள்ல அமைக்குற 'ஜி’ வடிவ பறவை இருக்கைகள். வயல்ல 6 அடி உயரத்துல 'ஜி’ வடிவத்துல குச்சிகளை நட்டு வெச்சி, அதுல வைக்கோல் பிரியை சுத்தி வெக்கணும்.
வெறும் குச்சியை மட்டும் வெச்சா பறவைக அதுல ரொம்ப நேரம் உக்கார முடியாது. வைக்கோல் சுத்தி வெக்கும் போது, குஷன் மாதிரி பறவைக வசதியா உக்காந்து, நாலா பக்கமும் பொறுமையா பூச்சிகளைத் தேடித் தேடி வேட்டையாடும். இந்தப் பறவைங்க, நெல்வயல்ல பூச்சிகளோட எண்ணிக்கையைக் குறைக்கறதுல முக்கிய பங்கு வகிக்குது.

உயிரியல் உருப்பெருக்கம்!

வயல்ல தெளிக்குற பூச்சிக்கொல்லி விஷம், தீமை செய்ற பூச்சிகளோட உடம்புக்குள்ள போனதும், அந்த விஷத்தோட வீரியம்...

10 மடங்கு அதிகமாகிடும். இந்தப் பூச்சியை, நன்மை செய்ற பூச்சி திங்கறப்ப... அதோட உடம்புக்குள்ள போற விஷம் 20 மடங்காயிடும். நன்மை செய்ற பூச்சியை பறவைக பிடிச்சு திங்கறப்ப, பறவைக்குள்ள போற விஷம் 30 மடங்காயிடும். அந்தப் பறவைகள மனுசங்க பிடிச்சு திங்குறப்ப விஷத்தோட வீரியம் 40 மடங்கா மாறிடும். இதை மருத்துவத்துல 'உயிரியல் உருப்பெருக்கம்'னு சொல்றாங்க.


நெல் வயல்ல தெளிக்குற பூச்சிக்கொல்லி விஷம், வைக்கோல் வழியா மாட்டு வயித்துக்குள்ள போயி, பாலா மாறி மனுஷன் உடம்புக்குள்ள போறப்பவும் இதே கதைதான் நடக்குது. இதைப் புரிஞ்சுகிட்டா... பூச்சிக்கொல்லிகளை நினைச்சுக்கூடப் பாக்க மாட்டீங்க.

வரப்பு பயிர்!


பிரதானப் பயிரைத் தாக்குற தீமை செய்ற பூச்சிகள, வயலுக்குள்ள போக விடாம தடுத்து நிறுத்துறதுக்காக உங்க வயல சுத்தி வரப்புப் பயிர் கட்டாயம் இருக்கணும். வரப்புப் பயிராக, உயரம் அதிகமான மக்காச்சோளம், சோளம், ஆமணக்கு மாதிரியான பயிர்களை நடணும்.

அடுத்து, நம்ம நிலத்துல இருக்கற நன்மை செய்ற பூச்சிகளுக்காக ஊடுபயிராகவோ, பொறிப்பயிராகவோ தட்டைப் பயறு, மக்காச்சோளம், சூரியகாந்தி, செண்டுமல்லி மாதிரியான மஞ்சள் நிற பூக்கள் இருக்குற பயிர்களை நடணும். இதன் மூலமா, நல்லது செய்ற பூச்சிகளுக்குத் தேன் கிடைக்கறதோட... மகரந்தமும் பரவும். இந்தப் பயிர்களை தாக்குற அசுவணி மாதிரியான பூச்சிகளும் நல்லது செய்ற பூச்சிகளுக்கு உணவாகிடும்.


பொறிகள்:


தீமை செய்ற பூச்சிகளை அழிக்க 3 விதமான பொறிகளை வயல்ல அமைக்கணும்.


மஞ்சள் நிற ஒட்டுப் பொறி:

பழைய டால்டா டின்கள்ல மஞ்சள் நிறத்தைத் தடவி, அதுமேல விளக்கெண்ணெய் இல்லனா கிரீஸை தடவி, ஒரு ஏக்கருக்கு 5 இடம்கிற கணக்குல, உசரமா குச்சியை நட்டு அதுமேல கவுத்து வெச்சிடணும். மஞ்ச நிறத்தால கவரப்பட்டு பக்கத்துல வர்ற அசுவணி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, இலைப்பேன் மாதிரியான பூச்சிக டப்பா மேல ஒட்டிக்கிட்டு அழிஞ்சு போகும்.

விளக்குப் பொறி:


வயல்ல 3 அடி உயரத்துல பெட்ரோமாக்ஸ் விளக்கு இல்லனா குண்டுபல்பைத் தொங்க விடணும். விளக்குக்கு கீழ இரும்புச் சட்டியை வெச்சு, அதுல தண்ணியை ஊத்தி, ரெண்டு சொட்டு மண்ணெண்ணெயையும் கலந்து விட்டுடணும். இந்த விளக்கு வெளிச்சத்துக்கு வர்ற பூச்சிக, விளக்கைச் சுத்தி வட்டமடிச்சு பாத்துட்டு, கீழ இருக்கற சட்டியில விழுந்து செத்துப் போகும். விளக்குப் பொறியை சாயங்காலம் 6 மணியிலிருந்து 9 வரைக்கும்தான் வெக்கணும். அதுக்கு மேல நன்மை செய்ற பூச்சிகளோட நடமாட்டம் அதிகமாயிடும்.


இனக்கவர்ச்சிப் பொறி:


பெண் பூச்சிகளோட வாசனைதான், ஆண் பூச்சிகளை இனப்பெருக்கத்துக்காக கவர்ந்து இழுக்கும். அதனால பெண் பூச்சிகளோட வாசனையை சைக்கிள் வால்டியூப் மாதிரியான ஒரு டியூப்ல அடைச்சு விக்குறாங்க. இந்த வால்டியூப்பை ஒரு பிளாஸ்டிக் பைக்குள்ள வெச்சி, மேல ஒரு மூடியை வெச்சு மூடியிருப்பாங்க. இந்த மூடியில சின்னதா ஒரு ஓட்டை இருக்கும். இதை வயல்ல வெக்கும்போது 5 கிலோ மீட்டர் தூரத்திலிருந்துகூட ஆண் பூச்சிக பறந்து வரும்.


வாசனை புடிச்சுகிட்டே வர்ற ஆண் பூச்சி ஒட்டை வழியா உள்ள போயி மாட்டிக்கும். இதையும் ஏக்கருக்கு 5 இடத்துல அமைக்கணும். இந்தப் பொறி மூலமா... பச்சைக்காய்ப் புழு, புருடீனியா புழு, நெல் குருத்துப்பூச்சி, கத்திரிக் காய்ப்புழு இதையெல்லாம் கட்டுப்படுத்தலாம்.

அவசியம் இருக்கணும், இடைவெளி!

இதைத் தவிர, பூச்சிகளை ஆரம்பம் முதலே கட்டுப்படுத்தறதுக்கு 5 வழிகள் இருக்கு.


கோடை உழவு:


கோடை உழவு செய்றப்ப 5 செ.மீ. முதல் 10 செ.மீ. வரைக்கும் அடி மண் கிளறப்படுது. அப்ப மண்ணுக்கு அடியில இருக்கற பூச்சிகளோட பல பருவங்கள் மேல வரும். இதுல பறவைக தின்னது போக மிச்சம் இருக்கறது வெயில் பட்டு செத்துப்போயிடும்.

கலப்புப் பயிர் :


வயல்ல எப்பவும் தனிப்பயிரா செய்யாம, கலப்புப் பயிரா செய்யும்போது, குறிப்பிட்ட சில பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

வரப்பு:


வயல்ல பயிர் இல்லாத நேரங்கள்ல, தீமை செய்ற பூச்சிக வரப்புகள்லதான் வசிக்கும். அதுக்கு இடம் கொடுக்காம, வரப்புகளை களை இல்லாம சுத்தமா வெச்சுக்கணும்.


இடைவெளி:

ஒவ்வொரு பயிரையும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைவெளியிலதான் நடணும். இடைவெளி குறைவா இருந்தா... நுண்ணிய சீதோஷ்ண நிலை உருவாகி, தீமை செய்ற பூச்சிக வசிக்கறதுக்கு நாமளே வசதி பண்ணிக் கொடுத்த மாதிரியாகிடும். இடைவெளி சரியா இருக்கறப்ப சூரியஒளியும், காத்தும் முறையா கிடைக்கும். பயிரோட வளர்ச்சி நல்லா இருக்கறதோட, தீமை செய்ற பூச்சிக அங்க வசிக்க முடியாம போயிடும்.


எரிக்கக் கூடாது:


அறுவடை செஞ்ச பிறகு கழிவுகளை வயல்ல வெச்சு எரிக்கக் கூடாது. இந்தக் கழிவுகள வயல்ல ஒரு ஓரத்துல குவிச்சு, நன்மை செய்ற பூச்சிக வசிக்கறதுக்கான வசதியை செஞ்சு கொடுக்கணும். உதாரணமா, நெல் வயல்ல அறுவடை செஞ்ச பிறகு, அடுத்தப் பயிர் வெக்குறவரைக்கும் வைக்கோல்லதான் சிலந்தி குடியிருக்கும்.


சர்க்கரைப் பாகு, தேன் கலந்த தண்ணியை வயல்ல தெளிச்சு விட்டா நன்மை செய்யும் பூச்சியான சிவப்பு எறும்பு, வயலுக்குள்ள அதிகமா வரும். சர்க்கரைத் தண்ணிய அது குடிச்சு முடிச்சதும், தீமை செய்ற பூச்சிகளை அழிக்க ஆரம்பிச்சுடும்.


புகை, தூசு கட்டுப்பாட்டுக்காக வயலைச் சுத்தி மரங்களை நட்டு வெக்கணும். காத்து தடுப்பா பயன்படுறதோட தூசுகள வயலுக்குள்ள விடாமலும் தடுக்கும். டிரைகோகிரம்மா மாதிரியான ஒட்டுண்ணிக காத்துல பறந்து போறதையும் தடுக்கலாம்.


இது எல்லாத்தையும் முறையா செஞ்சிட்டா... நம்ம வயல்ல இயற்கை சமநிலையை உருவாக்கிடலாம். பிறகு, பூச்சிக்கொல்லிக்கு வேலையே இருக்காது. இதுவரைக்கும் பூச்சிகளைப் பத்தி உங்ககிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்துகிட்ட நான், இப்போதைக்கு உத்தரவு வாங்கிக்கறேன்.


நன்றி விகடன்

'குளோபல் வாமிங்... சாயில் வாமிங்'

அரசியல் தலைவர்களின் சுற்றுப்பயணம் என்றால்... பொதுக்கூட்டம், சிலைதிறப்பு, கொடி ஏற்றுதல்... என்று வழக்கமான நிகழ்ச்சிகள்தான் இடம் பிடிக்கும். இதிலிருந்து சற்றே விலகி, கட்சிக்கு அப்பாற்பட்ட சிந்தனையாளர்கள், விவசாயிகள்... என்று பலதரப்பட்டவர்களையும் சந்தித்ததன் மூலம் வித்தியாசமான அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் நேரு குடும்பத்து வாரிசு ராகுல் காந்தி! இரண்டு நாள் பயணமாக டிசம்பர்-22 அன்று தமிழகம் வந்தவர், சென்னையிலிருக்கும் தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் இப்படியரு அபூர்வ சந்திப்பை நடத்தினார். இதில், விவசாயம் குறித்த கருத்துக்களே ஓங்கி ஒலித்தன.



'எக்ஸ்னோரா' அமைப்பைப் சேர்ந்த எம்.பி. நிர்மல், ''புவிவெப்பமயமாதல் எந்த அளவுக்கு முக்கியப் பிரச்னையோ... அதற்கு சற்றும் குறைவில்லாததுதான்... 'சாயில் வாமிங்’. அதாவது, சுருங்கிக் கொண்டிருக்கும் விளைநிலங்கள் பற்றிய பிரச்னை. அவையெல்லாம் வீட்டுமனைகளாக மாறிவருகின்றன. விவசாயம் இதே வேகத்தில் வீழ்ச்சியடைந்தால்... 2020-ல் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, நாட்டில் பாதி பேர் மாவோயிஸ்டுகளாக மாறும் ஆபத்து இருக்கிறது'' என்றார்.



நிதானமாகக் கேட்டுக் கொண்ட ராகுல்... ''ஏதேதோ காரணங்கள் சொல்லி, யார் யாரெல்லாமோ நாடு முழுக்கவே விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்கிறார்கள். சுரங்கங்கள் வெட்டுகிறோம் என்று மலைப் பிரதேச பூர்வக்குடிகளிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றுகிறார்கள். 'நிலம் கையகப்படுத்தும் செயலை முடிந்த அளவுக்குக் குறைப்பது' என்கிற கொள்கையை அரியானா மாநில அரசு வகுத்துள்ளது. அதை மேலும் செறிவூட்டி நாடு முழுவதும் அமல்படுத்தலாமா என்கிற யோசனையும் இருக்கிறது'' என்று வெளிப்படையாக பேசினார்.



இதையடுத்து, மதுபானம் தொடர்பான பேச்சுக்கள் வந்து விழ, அது இந்திய இளைஞர்களை சீரழிப்பதாக பலரும் குமுறினர். அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு கள் இயக்க, கள ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி, ''உச்ச நீதிமன்ற கருத்துப்படி, கள் என்பது ஒரு உணவு. ஆனால், அதை விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்துவிட்டு, வெளிநாட்டு மது ரகங்களை அரசு விற்பனை செய்கிறது. கள் தவிர, அனைத்து மது வகைகளையும் தடை செய்ய வேண்டும்'' என்று ஆணித்தரமான கருத்துக்களை எடுத்து வைத்தார்.



உடனே...''உங்கள் கையிலிருக்கும் மனுவை என்னிடம் முதலில் கொடுங்கள். டெல்லிக்குப் போனதும் உங்கள் கருத்துக்களை அரசு பொறுப்பில் இருக்கிறவர்களிடம் பேசுகிறேன்!'' என்று ஆர்வத்தோடு வாங்கிக் கொண்டார் ராகுல்!



புதிய பாதை போட முயற்சிக்கிறார் ராகுல். பழம் தின்று கொட்டைபோட்ட அரசியல்வாதிகளை மீறி, இவரால் இதையெல்லாம் சாதிக்க முடிந்தால்... நல்லதுதானே!



நன்றி விகடன்

விவசாயம் செழிப்புற

1) விளைபொருட்களின் விலையை அதை உற்பத்தி செய்தோரே நிர்ணயிக்கும் நிலை இல்லாமை

2) வேலை செய்யும் ஆட்களின் எண்ணிக்கை குறைவால், அதில் இயந்திரத்தின் பயன்பாட்டினை அதிகரித்தல்

3) இயற்கை சீற்றத்தின்போது ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டுதல்

4) விளைபொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எளிதில் / விரைவில் சேர்க்க வசதி

5) விளைபொருட்களை சேமித்து வைக்க குறைந்த விலையில் வசதி



வடமாநிலங்களில் ஐ டி சி நிறுவனம் ஈ‍ செளபால் என்ற ஒரு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திவருவதாக அறிகிறேன். தமிழ்நாட்டிலும் அது செயல்பாட்டில் இருக்கிறதா என்பது தெரியாது. அது போல் இங்கும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்



Posted by இந்தியன்

விவசாயம் - லாபம் மிக்க தொழில்

இந்தியாவின் இதயம் கிராமம்.

இந்தியர்களின் தேசியத் தொழில் விவசாயம்.



அடடா...



ஒரு புறம் மாதம் 30,000 ரூபாய் வாங்கும் IT Engineer...

மறுபுறம் வருடம் முழுவதும் உழைத்தும்,

விதை நெல்லுக்கு தாலியை அடகு வைக்கும் அவலம்...



தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...

விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...



நல்லது. இதனை எப்படி சாதிக்கப் போகிறோம்? என்னை விட இந்த விசயத்தை மிக நல்ல முறையில் பல பேர் அணுகியிருக்கலாம். ஆனாலும், எனக்கு தோன்றியதை சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.



1. விவசாயம் பெரும் பாலும் பாதிக்கப் படுவது மழை பொய்ப்பதும், புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீரழிவுகளாலும்தான். இந்த எதிர்பாரத விளைவுகளை, நஷ்டத்தை காப்பீடு (Insurance) செய்வதன் மூலம் தவிர்கலாம். இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

2. வேளாண்மை பல்கலைகழகங்களில் நடக்கும் ஆராய்ச்சியின் பயன், விவசாயியை சென்றடைய வேண்டும்.

3. பல்வேறு பணப்பயிர் (மூலிகை, ஆமணக்கு மற்றும் பிற ஏற்றுமதிக்கு உரிய பயிர்கள்) பற்றிய விவரங்கள் கிடைக்க வேண்டும்.

4. கிராமம் தோறும், விளை பொருட்களை விவசாயின் நேரடி விற்பணைக்கு எடுத்துச் செல்ல, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

5. ஒருங்கிணைந்த ஏற்றுமதி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும்

6. ஆண்டு முழுவதும் வருமானம் வரும்படி, ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பு முறைகளில் அறிவியல் கலந்த, அதிகம் பலன் தரக் கூடிய முறைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்.



இவை அனைத்திற்கும் மேலாக, ஒரு கிராமத்தை தத்து எடுத்து, சோதனை முறையில் செயல் படுத்தி, சாதனையாக்க வேண்டும்.



இதன் முன்னோட்டமாக, வரும் ஜுலை மாதம், முதன் முறையாக, வயல் (தோப்பு/காடு) வாங்குவதற்கு தயாராகி வருகிறேன்.



இங்கு, அமெரிக்காவில், அனைத்துமே நடைமுறையில் உள்ளது.



விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...



ம்ம்... அது அவ்வளவு சுலபமா? இது என்ன ரஜினி படமா? ஒரு பாட்டு முடியற நேரத்துல சாதிக்கிறதுக்கு...

ஆனா எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுதே... முடியும்னு...



ஈ.வே.இராமசாமி என்ற ஒரு தனி மனிதனின் மனதில், இந்த சமுதாய பொய்மைகளை கண்டு உருவான ஒரு தீப்பொரி தானே நமக்கு தந்தை பெரியாரை அடையாளம் காட்டியது, மூட நம்பிக்கைகளை சுட்டு பொசுக்கியது,



மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்ற சாதாரண மனிதனுக்கு ஏற்பட்ட அவமானமும், அதனை தொடர்ந்து எழுந்த விடுதலை வேட்கையும், நமக்கு உலகமே கொண்டாடும் மாகாத்மா காந்தியை அடையாளம் காட்டியது. அஹிம்சையின் வலிமையை எடுத்து சொன்னது...



இதோ... இங்கு நான் மட்டும் இல்லை... இதை படிக்கும், நீங்களும் இணையும் போது, ஏன் முடியாது?



Posted by செந்தில்நாதன் செல்லம்மாள்

கரூரைக் கலக்கிய விவசாயிகள் மாநாடு !

''இந்த நிலை மாறும். இனி, நாம் போன் செய்தால், முதல்வர் கருணாநிதியே போனைக் கையில் எடுத்து 'ஹலோ' என்று சொல்லக்கூடிய நிலை உருவாகும்''



-டிசம்பர் 19-ந் தேதியன்று, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் சார்பில் கரூரில் நடத்தப்பட்ட விவசாயிகள் அரசியல் எழுச்சி மாநாட்டில் ஓங்கி ஒலித்தது இப்படியரு குரல்.



அதற்கு அர்த்தம் கொடுப்பது போல... காலை ஒன்பது மணிக்கு வெள்ளமென திரண்டக் கூட்டம்... இரவு ஒன்பது மணி வரையிலும் அசையவில்லை!



கால்நடை, வேளாண் உபகரணங்கள், விவசாயப் பத்திரிகைகள் என 45 அரங்குகளோடு கூடிய கண்காட்சி... கொங்கு நாட்டு பாரம்பர்யக் கலைகளான, வள்ளிக்கும்மி ஒயிலாட்டம், பெண்களின் வட்டக்கும்மி, உடுக்கடி கதைப்பாட்டு, உருமிமேளம், கரகாட்டம், கலைநிகழ்ச்சிகள்... என்றெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒரு நாள் மாநாடு...



'விவசாயிகள் என்றொரு இனம் இருக்கிறது. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், அது பொறுத்துக் கொள்ளாது. பொங்கி எழும்' என்பதை எச்சரிக்கும் விதத்திலேயே நடந்து முடிந்திருக்கிறது.



கொங்கு நாடு முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் 'பெஸ்ட்’ ராமசாமி தன்னுடைய பேச்சில், ''பதினெட்டு வருடங்களுக்கும் மேலாக மின் இணைப்பு வேண்டி பாசன விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவையான நேரத்தில் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படுவதில்லை.



குறைந்த செலவில் நீர் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு கொங்கு மண்டலத்தில் நிறைய இருந்தும், அதற்கான திட்டங்கள் வகுத்து நீர் மின்சாரத்தை மேம்படுத்தவில்லை. சோலையாறு, குந்தா, பைக்காரா, மேட்டூர் போன்ற கொங்கு மண்டலத்தில் மட்டும் 600 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இப்பகுதி விவசாயிகளுக்கு மின் இணைப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.



முட்டை உற்பத்தியில் நாமக்கல்; மஞ்சள் விவசாயத்தில் ஈரோடு; ஜவ்வரிசி தொழிலில் சேலம்; பம்ப்-செட் மோட்டார் உற்பத்தியில் கோவை என்று இந்த மண்டலம்தான் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருகிறது.



கற்றாழை, கள்ளி முளைத்தக் கரட்டு நிலத்தைக் கூட கழனிவயலாக மாற்றும் ஆற்றல் கொண்ட கடுமையான உழைப்பாளிகளைக் கொண்டது கொங்குநாடு. ஆனால், அவர்கள் இந்த அரசால் புறக்கணிக்கப் படுகிறார்கள்'' என்றெல்லாம் வேதனையை வெளிப்படுத்திவிட்டு,



''இந்த மாபெரும் கூட்டம், ஆள்வோரின் எண்ண ஓட்டத்தை மாற்றும். இனி, நாம் போன் செய்தால்... முதல்வரே பேசும் நிலை ஏற்படும்'' என்று சொன்னார்.



பொதுச் செயலாளர் ஈஸ்வரன், ''விவசாயிகளுக்கு மட்டும்தான் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயம் ஒரு வியாபாரமாக பார்க்கப்பட்டு, முழுமையாக மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், இங்கு நலிவடைந்த சினிமா நிறுவனங்களுக்கு மானியத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கிறார்கள். விவசாயிகளை யாரும் கண்டு கொள்வதேயில்லை.



ஒரே சமயத்தில் பத்துக்குட்டிகள் ஈனும் பன்றி இனம்கூட, சாயக்கழிவு கலந்த நீர் காரணமாக மலட்டுத்தன்மையை நோக்கிப் போய் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. பன்றிகளுக்கே இந்த நிலைமை என்றால், மனித இனம் எம்மாத்திரம். முறையாக கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றாத ஆலைகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு லிட்டர் பாலுக்கு 30 ரூபாயாக விலையை உயர்த்தித் தர வேண்டும்'' என்றெல்லாம் கோரிக்கை வைத்தார்.



நிறைவாக... 'அவினாசி-அத்திக்கடவு நீர் திட்டத்தைத் தொடங்க வேண்டும்; பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் திட்டதைத் தடுக்க வேண்டும்; நொய்யலாற்றை உப்பாறுடன் இணைக்க வேண்டும்; தோட்டக்கலைப் பயிர்களுக்கும் நிபந்தனையின்றி இலவச மின்சாரம் வழங்க வேண்டும்; கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க வேண்டும்; என்பது உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை, அரசின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



கண்காட்சி தொடரும்!



மாநாட்டின் கண்காட்சிக்குழுத் தலைவர் கு.பழனிசாமி நம்மிடம் பேசும்போது, சோதனை அடிப்படையில்தான் இந்த மாநாட்டில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தோம். பல ஆயிரம் விவசாயிகள் ஆர்வமுடன் அதையெல்லாம் பார்த்து பயன் பெற்றுள்ளனர். இதையடுத்து, ஆண்டுதோறும் நாமக்கல், திருப்பூர், சேலம், ஆத்தூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தலாமா? என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்று சொன்னார்.



நன்றி விகடன்





ராமநதி ஆற்றை காணவில்லை

ஒரு படத்தில் வடிவேலு கிணற்றை காணோம் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பார்... அதே நிலைமை தற்போது ராமநதி ஆற்றுக்கு ஏற்பட்டுள்ளது. ராமநதி அணையிலிருந்து வரும் தண்ணீர் ஏராளமான விவசாய நிலங்களுக்கு செல்கிறது. அம்பாசமுத்திரம் - தென்காசி மெயின்ரோட்டில் பொட்டல்புதூர் செல்லும் வழியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் வழியாக ராமநதி ஆழ்வார்குறிச்சி வழியாக பாப்பான்குளம் மற்றும் முக்கூடல் சென்று சேருகிறது.இந்த ராமநதி ஆற்றை ஆழ்வார்குறிச்சியில் உள்ளவர்கள் வறட்டை ஆறு என கூறுவார்கள். ஆழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் வழியில் வன்னியப்பர் - சிவகாமியம்பாள் கோயிலுக்கு அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தில் நின்று வடக்கே பார்த்தால் ராமநதி ஆறு எங்கிருக்கின்றது என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றில் முட்செடிகள், கொடிகள், அமலை செடிகள், விஷ செடிகள், புல் பூண்டுகள் என ஆறே தெரியாத அளவிற்கு மர்ம பிரதேசமாக உள்ளது.ஆற்றில் தண்ணீர் வருகிறதா? என்பது தெரியாத அளவு ஆறு முழுவதும் செடிகொடிகளால் மூடப்பட்டுள்ளது.

இதேபோல் பொட்டல்புதூர் - ஆழ்வார்குறிச்சி நடுவேயுள்ள பாலத்தில் இருந்து கிழக்கு நோக்கி பார்த்தால் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. ஆற்றினுள் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய முடியாத அளவிற்கு செடிகொடிகள் வளர்ந்துள்ளது.வடிவேல் காமெடிக்காக கிணற்றை காணவில்லை என்பது போல் இங்கே உண்மையாகவே ஆற்றை காணாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றிலுள்ள செடி கொடிகளை முழுவதுமாக அகற்றினால் தெளிவான நீரோட்டம் ஏற்பட்டு தண்ணீர் தாராளமாக செல்லும். செடி, கொடி முட்களால் தடைபடும் தண்ணீர் முழு சுகாதாரமற்ற நீராகவும் மாறிவிடுகிறது. இந்த ஆற்றினுள் ஆறே தெரியாத அளவு செடி கொடிகள் இருப்பதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் ஏற்பட்டுள்ளது.பொதுப்பணித்துறையினர் இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. போர்க்கால அடிப்படையில் ஆற்றினை சீரமைத்து தரவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் தண்ணீர் அதிகமாக வரும் நேரங்களில் செடி, கொடிகள் இருப்பது தெரியாமல் ஆற்றிற்குள் இறங்கினால் உயிர்பலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆற்றின் உள்ளே உள்ள செடி கொடிகளை மட்டும் உடனே அகற்றாவிட்டால் வரும் காலங்களில் தண்ணீர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் வேகமாக செல்லும் நிலைமை நிறுத்தப்பட்டு விடும்.விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி:தினமலர்