Monday, January 3, 2011

ராமநதி ஆற்றை காணவில்லை

ஒரு படத்தில் வடிவேலு கிணற்றை காணோம் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பார்... அதே நிலைமை தற்போது ராமநதி ஆற்றுக்கு ஏற்பட்டுள்ளது. ராமநதி அணையிலிருந்து வரும் தண்ணீர் ஏராளமான விவசாய நிலங்களுக்கு செல்கிறது. அம்பாசமுத்திரம் - தென்காசி மெயின்ரோட்டில் பொட்டல்புதூர் செல்லும் வழியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் வழியாக ராமநதி ஆழ்வார்குறிச்சி வழியாக பாப்பான்குளம் மற்றும் முக்கூடல் சென்று சேருகிறது.இந்த ராமநதி ஆற்றை ஆழ்வார்குறிச்சியில் உள்ளவர்கள் வறட்டை ஆறு என கூறுவார்கள். ஆழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் வழியில் வன்னியப்பர் - சிவகாமியம்பாள் கோயிலுக்கு அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தில் நின்று வடக்கே பார்த்தால் ராமநதி ஆறு எங்கிருக்கின்றது என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றில் முட்செடிகள், கொடிகள், அமலை செடிகள், விஷ செடிகள், புல் பூண்டுகள் என ஆறே தெரியாத அளவிற்கு மர்ம பிரதேசமாக உள்ளது.ஆற்றில் தண்ணீர் வருகிறதா? என்பது தெரியாத அளவு ஆறு முழுவதும் செடிகொடிகளால் மூடப்பட்டுள்ளது.

இதேபோல் பொட்டல்புதூர் - ஆழ்வார்குறிச்சி நடுவேயுள்ள பாலத்தில் இருந்து கிழக்கு நோக்கி பார்த்தால் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. ஆற்றினுள் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய முடியாத அளவிற்கு செடிகொடிகள் வளர்ந்துள்ளது.வடிவேல் காமெடிக்காக கிணற்றை காணவில்லை என்பது போல் இங்கே உண்மையாகவே ஆற்றை காணாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றிலுள்ள செடி கொடிகளை முழுவதுமாக அகற்றினால் தெளிவான நீரோட்டம் ஏற்பட்டு தண்ணீர் தாராளமாக செல்லும். செடி, கொடி முட்களால் தடைபடும் தண்ணீர் முழு சுகாதாரமற்ற நீராகவும் மாறிவிடுகிறது. இந்த ஆற்றினுள் ஆறே தெரியாத அளவு செடி கொடிகள் இருப்பதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் ஏற்பட்டுள்ளது.பொதுப்பணித்துறையினர் இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. போர்க்கால அடிப்படையில் ஆற்றினை சீரமைத்து தரவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் தண்ணீர் அதிகமாக வரும் நேரங்களில் செடி, கொடிகள் இருப்பது தெரியாமல் ஆற்றிற்குள் இறங்கினால் உயிர்பலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆற்றின் உள்ளே உள்ள செடி கொடிகளை மட்டும் உடனே அகற்றாவிட்டால் வரும் காலங்களில் தண்ணீர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் வேகமாக செல்லும் நிலைமை நிறுத்தப்பட்டு விடும்.விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி:தினமலர்



No comments:

Post a Comment