Monday, January 3, 2011

பூச்சிக்கொல்லிக்கு வேலையில்லை!

இரைவிழுங்கி, ஒட்டுண்ணி, நோய் பரப்பும் காரணிகள்னு சொல்லப்படுற வரிசையில... இயற்கையாவே பூச்சிகளுக்கு எதிரிகளா இருக்கற காக்கா, கொக்கு, குருவி, மைனா, ஆந்தை, கரிச்சான், பாம்பு, பல்லி, தவளை, ஓணான் மாதிரியான உயிர்களைப் பத்தி பாக்கப் போறோம்.
வயல்ல பூச்சிகள சமநிலையில வெக்குறதுல மேலே சொன்ன ஜீவன்களோட பங்கு முக்கியமானது. நிலத்தை உழும்போது, மண்ணுக்கு அடியில கூட்டுப்புழு, முட்டைனு பல நிலைகள்ல இருக்கறப் பூச்சிகளோட வெவ்வேறு பருவம், மண்ணுக்கு மேல வரும்.
டிராக்டருக்கு பின்னால வரிசை கட்டி வர்ற கொக்கு, மைனா மாதிரியான பறவைங்க அந்தப் பூச்சிகள பிடிச்சு அழிச்சுடும்.மேற்படி பறவை இனங்கள, பயிர் பாதுகாப்பு விஷயத்துல கொண்டு வரலாம்ங்கறதுக்கான ஆரம்பம்தான்... நெல் வயல்கள்ல அமைக்குற 'ஜி’ வடிவ பறவை இருக்கைகள். வயல்ல 6 அடி உயரத்துல 'ஜி’ வடிவத்துல குச்சிகளை நட்டு வெச்சி, அதுல வைக்கோல் பிரியை சுத்தி வெக்கணும்.
வெறும் குச்சியை மட்டும் வெச்சா பறவைக அதுல ரொம்ப நேரம் உக்கார முடியாது. வைக்கோல் சுத்தி வெக்கும் போது, குஷன் மாதிரி பறவைக வசதியா உக்காந்து, நாலா பக்கமும் பொறுமையா பூச்சிகளைத் தேடித் தேடி வேட்டையாடும். இந்தப் பறவைங்க, நெல்வயல்ல பூச்சிகளோட எண்ணிக்கையைக் குறைக்கறதுல முக்கிய பங்கு வகிக்குது.

உயிரியல் உருப்பெருக்கம்!

வயல்ல தெளிக்குற பூச்சிக்கொல்லி விஷம், தீமை செய்ற பூச்சிகளோட உடம்புக்குள்ள போனதும், அந்த விஷத்தோட வீரியம்...

10 மடங்கு அதிகமாகிடும். இந்தப் பூச்சியை, நன்மை செய்ற பூச்சி திங்கறப்ப... அதோட உடம்புக்குள்ள போற விஷம் 20 மடங்காயிடும். நன்மை செய்ற பூச்சியை பறவைக பிடிச்சு திங்கறப்ப, பறவைக்குள்ள போற விஷம் 30 மடங்காயிடும். அந்தப் பறவைகள மனுசங்க பிடிச்சு திங்குறப்ப விஷத்தோட வீரியம் 40 மடங்கா மாறிடும். இதை மருத்துவத்துல 'உயிரியல் உருப்பெருக்கம்'னு சொல்றாங்க.


நெல் வயல்ல தெளிக்குற பூச்சிக்கொல்லி விஷம், வைக்கோல் வழியா மாட்டு வயித்துக்குள்ள போயி, பாலா மாறி மனுஷன் உடம்புக்குள்ள போறப்பவும் இதே கதைதான் நடக்குது. இதைப் புரிஞ்சுகிட்டா... பூச்சிக்கொல்லிகளை நினைச்சுக்கூடப் பாக்க மாட்டீங்க.

வரப்பு பயிர்!


பிரதானப் பயிரைத் தாக்குற தீமை செய்ற பூச்சிகள, வயலுக்குள்ள போக விடாம தடுத்து நிறுத்துறதுக்காக உங்க வயல சுத்தி வரப்புப் பயிர் கட்டாயம் இருக்கணும். வரப்புப் பயிராக, உயரம் அதிகமான மக்காச்சோளம், சோளம், ஆமணக்கு மாதிரியான பயிர்களை நடணும்.

அடுத்து, நம்ம நிலத்துல இருக்கற நன்மை செய்ற பூச்சிகளுக்காக ஊடுபயிராகவோ, பொறிப்பயிராகவோ தட்டைப் பயறு, மக்காச்சோளம், சூரியகாந்தி, செண்டுமல்லி மாதிரியான மஞ்சள் நிற பூக்கள் இருக்குற பயிர்களை நடணும். இதன் மூலமா, நல்லது செய்ற பூச்சிகளுக்குத் தேன் கிடைக்கறதோட... மகரந்தமும் பரவும். இந்தப் பயிர்களை தாக்குற அசுவணி மாதிரியான பூச்சிகளும் நல்லது செய்ற பூச்சிகளுக்கு உணவாகிடும்.


பொறிகள்:


தீமை செய்ற பூச்சிகளை அழிக்க 3 விதமான பொறிகளை வயல்ல அமைக்கணும்.


மஞ்சள் நிற ஒட்டுப் பொறி:

பழைய டால்டா டின்கள்ல மஞ்சள் நிறத்தைத் தடவி, அதுமேல விளக்கெண்ணெய் இல்லனா கிரீஸை தடவி, ஒரு ஏக்கருக்கு 5 இடம்கிற கணக்குல, உசரமா குச்சியை நட்டு அதுமேல கவுத்து வெச்சிடணும். மஞ்ச நிறத்தால கவரப்பட்டு பக்கத்துல வர்ற அசுவணி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, இலைப்பேன் மாதிரியான பூச்சிக டப்பா மேல ஒட்டிக்கிட்டு அழிஞ்சு போகும்.

விளக்குப் பொறி:


வயல்ல 3 அடி உயரத்துல பெட்ரோமாக்ஸ் விளக்கு இல்லனா குண்டுபல்பைத் தொங்க விடணும். விளக்குக்கு கீழ இரும்புச் சட்டியை வெச்சு, அதுல தண்ணியை ஊத்தி, ரெண்டு சொட்டு மண்ணெண்ணெயையும் கலந்து விட்டுடணும். இந்த விளக்கு வெளிச்சத்துக்கு வர்ற பூச்சிக, விளக்கைச் சுத்தி வட்டமடிச்சு பாத்துட்டு, கீழ இருக்கற சட்டியில விழுந்து செத்துப் போகும். விளக்குப் பொறியை சாயங்காலம் 6 மணியிலிருந்து 9 வரைக்கும்தான் வெக்கணும். அதுக்கு மேல நன்மை செய்ற பூச்சிகளோட நடமாட்டம் அதிகமாயிடும்.


இனக்கவர்ச்சிப் பொறி:


பெண் பூச்சிகளோட வாசனைதான், ஆண் பூச்சிகளை இனப்பெருக்கத்துக்காக கவர்ந்து இழுக்கும். அதனால பெண் பூச்சிகளோட வாசனையை சைக்கிள் வால்டியூப் மாதிரியான ஒரு டியூப்ல அடைச்சு விக்குறாங்க. இந்த வால்டியூப்பை ஒரு பிளாஸ்டிக் பைக்குள்ள வெச்சி, மேல ஒரு மூடியை வெச்சு மூடியிருப்பாங்க. இந்த மூடியில சின்னதா ஒரு ஓட்டை இருக்கும். இதை வயல்ல வெக்கும்போது 5 கிலோ மீட்டர் தூரத்திலிருந்துகூட ஆண் பூச்சிக பறந்து வரும்.


வாசனை புடிச்சுகிட்டே வர்ற ஆண் பூச்சி ஒட்டை வழியா உள்ள போயி மாட்டிக்கும். இதையும் ஏக்கருக்கு 5 இடத்துல அமைக்கணும். இந்தப் பொறி மூலமா... பச்சைக்காய்ப் புழு, புருடீனியா புழு, நெல் குருத்துப்பூச்சி, கத்திரிக் காய்ப்புழு இதையெல்லாம் கட்டுப்படுத்தலாம்.

அவசியம் இருக்கணும், இடைவெளி!

இதைத் தவிர, பூச்சிகளை ஆரம்பம் முதலே கட்டுப்படுத்தறதுக்கு 5 வழிகள் இருக்கு.


கோடை உழவு:


கோடை உழவு செய்றப்ப 5 செ.மீ. முதல் 10 செ.மீ. வரைக்கும் அடி மண் கிளறப்படுது. அப்ப மண்ணுக்கு அடியில இருக்கற பூச்சிகளோட பல பருவங்கள் மேல வரும். இதுல பறவைக தின்னது போக மிச்சம் இருக்கறது வெயில் பட்டு செத்துப்போயிடும்.

கலப்புப் பயிர் :


வயல்ல எப்பவும் தனிப்பயிரா செய்யாம, கலப்புப் பயிரா செய்யும்போது, குறிப்பிட்ட சில பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

வரப்பு:


வயல்ல பயிர் இல்லாத நேரங்கள்ல, தீமை செய்ற பூச்சிக வரப்புகள்லதான் வசிக்கும். அதுக்கு இடம் கொடுக்காம, வரப்புகளை களை இல்லாம சுத்தமா வெச்சுக்கணும்.


இடைவெளி:

ஒவ்வொரு பயிரையும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைவெளியிலதான் நடணும். இடைவெளி குறைவா இருந்தா... நுண்ணிய சீதோஷ்ண நிலை உருவாகி, தீமை செய்ற பூச்சிக வசிக்கறதுக்கு நாமளே வசதி பண்ணிக் கொடுத்த மாதிரியாகிடும். இடைவெளி சரியா இருக்கறப்ப சூரியஒளியும், காத்தும் முறையா கிடைக்கும். பயிரோட வளர்ச்சி நல்லா இருக்கறதோட, தீமை செய்ற பூச்சிக அங்க வசிக்க முடியாம போயிடும்.


எரிக்கக் கூடாது:


அறுவடை செஞ்ச பிறகு கழிவுகளை வயல்ல வெச்சு எரிக்கக் கூடாது. இந்தக் கழிவுகள வயல்ல ஒரு ஓரத்துல குவிச்சு, நன்மை செய்ற பூச்சிக வசிக்கறதுக்கான வசதியை செஞ்சு கொடுக்கணும். உதாரணமா, நெல் வயல்ல அறுவடை செஞ்ச பிறகு, அடுத்தப் பயிர் வெக்குறவரைக்கும் வைக்கோல்லதான் சிலந்தி குடியிருக்கும்.


சர்க்கரைப் பாகு, தேன் கலந்த தண்ணியை வயல்ல தெளிச்சு விட்டா நன்மை செய்யும் பூச்சியான சிவப்பு எறும்பு, வயலுக்குள்ள அதிகமா வரும். சர்க்கரைத் தண்ணிய அது குடிச்சு முடிச்சதும், தீமை செய்ற பூச்சிகளை அழிக்க ஆரம்பிச்சுடும்.


புகை, தூசு கட்டுப்பாட்டுக்காக வயலைச் சுத்தி மரங்களை நட்டு வெக்கணும். காத்து தடுப்பா பயன்படுறதோட தூசுகள வயலுக்குள்ள விடாமலும் தடுக்கும். டிரைகோகிரம்மா மாதிரியான ஒட்டுண்ணிக காத்துல பறந்து போறதையும் தடுக்கலாம்.


இது எல்லாத்தையும் முறையா செஞ்சிட்டா... நம்ம வயல்ல இயற்கை சமநிலையை உருவாக்கிடலாம். பிறகு, பூச்சிக்கொல்லிக்கு வேலையே இருக்காது. இதுவரைக்கும் பூச்சிகளைப் பத்தி உங்ககிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்துகிட்ட நான், இப்போதைக்கு உத்தரவு வாங்கிக்கறேன்.


நன்றி விகடன்

No comments:

Post a Comment