''இந்த நிலை மாறும். இனி, நாம் போன் செய்தால், முதல்வர் கருணாநிதியே போனைக் கையில் எடுத்து 'ஹலோ' என்று சொல்லக்கூடிய நிலை உருவாகும்''
-டிசம்பர் 19-ந் தேதியன்று, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் சார்பில் கரூரில் நடத்தப்பட்ட விவசாயிகள் அரசியல் எழுச்சி மாநாட்டில் ஓங்கி ஒலித்தது இப்படியரு குரல்.
அதற்கு அர்த்தம் கொடுப்பது போல... காலை ஒன்பது மணிக்கு வெள்ளமென திரண்டக் கூட்டம்... இரவு ஒன்பது மணி வரையிலும் அசையவில்லை!
கால்நடை, வேளாண் உபகரணங்கள், விவசாயப் பத்திரிகைகள் என 45 அரங்குகளோடு கூடிய கண்காட்சி... கொங்கு நாட்டு பாரம்பர்யக் கலைகளான, வள்ளிக்கும்மி ஒயிலாட்டம், பெண்களின் வட்டக்கும்மி, உடுக்கடி கதைப்பாட்டு, உருமிமேளம், கரகாட்டம், கலைநிகழ்ச்சிகள்... என்றெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒரு நாள் மாநாடு...
'விவசாயிகள் என்றொரு இனம் இருக்கிறது. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், அது பொறுத்துக் கொள்ளாது. பொங்கி எழும்' என்பதை எச்சரிக்கும் விதத்திலேயே நடந்து முடிந்திருக்கிறது.
கொங்கு நாடு முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் 'பெஸ்ட்’ ராமசாமி தன்னுடைய பேச்சில், ''பதினெட்டு வருடங்களுக்கும் மேலாக மின் இணைப்பு வேண்டி பாசன விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவையான நேரத்தில் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படுவதில்லை.
குறைந்த செலவில் நீர் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு கொங்கு மண்டலத்தில் நிறைய இருந்தும், அதற்கான திட்டங்கள் வகுத்து நீர் மின்சாரத்தை மேம்படுத்தவில்லை. சோலையாறு, குந்தா, பைக்காரா, மேட்டூர் போன்ற கொங்கு மண்டலத்தில் மட்டும் 600 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இப்பகுதி விவசாயிகளுக்கு மின் இணைப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
முட்டை உற்பத்தியில் நாமக்கல்; மஞ்சள் விவசாயத்தில் ஈரோடு; ஜவ்வரிசி தொழிலில் சேலம்; பம்ப்-செட் மோட்டார் உற்பத்தியில் கோவை என்று இந்த மண்டலம்தான் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருகிறது.
கற்றாழை, கள்ளி முளைத்தக் கரட்டு நிலத்தைக் கூட கழனிவயலாக மாற்றும் ஆற்றல் கொண்ட கடுமையான உழைப்பாளிகளைக் கொண்டது கொங்குநாடு. ஆனால், அவர்கள் இந்த அரசால் புறக்கணிக்கப் படுகிறார்கள்'' என்றெல்லாம் வேதனையை வெளிப்படுத்திவிட்டு,
''இந்த மாபெரும் கூட்டம், ஆள்வோரின் எண்ண ஓட்டத்தை மாற்றும். இனி, நாம் போன் செய்தால்... முதல்வரே பேசும் நிலை ஏற்படும்'' என்று சொன்னார்.
பொதுச் செயலாளர் ஈஸ்வரன், ''விவசாயிகளுக்கு மட்டும்தான் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயம் ஒரு வியாபாரமாக பார்க்கப்பட்டு, முழுமையாக மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், இங்கு நலிவடைந்த சினிமா நிறுவனங்களுக்கு மானியத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கிறார்கள். விவசாயிகளை யாரும் கண்டு கொள்வதேயில்லை.
ஒரே சமயத்தில் பத்துக்குட்டிகள் ஈனும் பன்றி இனம்கூட, சாயக்கழிவு கலந்த நீர் காரணமாக மலட்டுத்தன்மையை நோக்கிப் போய் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. பன்றிகளுக்கே இந்த நிலைமை என்றால், மனித இனம் எம்மாத்திரம். முறையாக கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றாத ஆலைகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு லிட்டர் பாலுக்கு 30 ரூபாயாக விலையை உயர்த்தித் தர வேண்டும்'' என்றெல்லாம் கோரிக்கை வைத்தார்.
நிறைவாக... 'அவினாசி-அத்திக்கடவு நீர் திட்டத்தைத் தொடங்க வேண்டும்; பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் திட்டதைத் தடுக்க வேண்டும்; நொய்யலாற்றை உப்பாறுடன் இணைக்க வேண்டும்; தோட்டக்கலைப் பயிர்களுக்கும் நிபந்தனையின்றி இலவச மின்சாரம் வழங்க வேண்டும்; கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க வேண்டும்; என்பது உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை, அரசின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி தொடரும்!
மாநாட்டின் கண்காட்சிக்குழுத் தலைவர் கு.பழனிசாமி நம்மிடம் பேசும்போது, சோதனை அடிப்படையில்தான் இந்த மாநாட்டில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தோம். பல ஆயிரம் விவசாயிகள் ஆர்வமுடன் அதையெல்லாம் பார்த்து பயன் பெற்றுள்ளனர். இதையடுத்து, ஆண்டுதோறும் நாமக்கல், திருப்பூர், சேலம், ஆத்தூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தலாமா? என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்று சொன்னார்.
நன்றி விகடன்
No comments:
Post a Comment