அரசியல் தலைவர்களின் சுற்றுப்பயணம் என்றால்... பொதுக்கூட்டம், சிலைதிறப்பு, கொடி ஏற்றுதல்... என்று வழக்கமான நிகழ்ச்சிகள்தான் இடம் பிடிக்கும். இதிலிருந்து சற்றே விலகி, கட்சிக்கு அப்பாற்பட்ட சிந்தனையாளர்கள், விவசாயிகள்... என்று பலதரப்பட்டவர்களையும் சந்தித்ததன் மூலம் வித்தியாசமான அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் நேரு குடும்பத்து வாரிசு ராகுல் காந்தி! இரண்டு நாள் பயணமாக டிசம்பர்-22 அன்று தமிழகம் வந்தவர், சென்னையிலிருக்கும் தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் இப்படியரு அபூர்வ சந்திப்பை நடத்தினார். இதில், விவசாயம் குறித்த கருத்துக்களே ஓங்கி ஒலித்தன.
'எக்ஸ்னோரா' அமைப்பைப் சேர்ந்த எம்.பி. நிர்மல், ''புவிவெப்பமயமாதல் எந்த அளவுக்கு முக்கியப் பிரச்னையோ... அதற்கு சற்றும் குறைவில்லாததுதான்... 'சாயில் வாமிங்’. அதாவது, சுருங்கிக் கொண்டிருக்கும் விளைநிலங்கள் பற்றிய பிரச்னை. அவையெல்லாம் வீட்டுமனைகளாக மாறிவருகின்றன. விவசாயம் இதே வேகத்தில் வீழ்ச்சியடைந்தால்... 2020-ல் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, நாட்டில் பாதி பேர் மாவோயிஸ்டுகளாக மாறும் ஆபத்து இருக்கிறது'' என்றார்.
நிதானமாகக் கேட்டுக் கொண்ட ராகுல்... ''ஏதேதோ காரணங்கள் சொல்லி, யார் யாரெல்லாமோ நாடு முழுக்கவே விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்கிறார்கள். சுரங்கங்கள் வெட்டுகிறோம் என்று மலைப் பிரதேச பூர்வக்குடிகளிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றுகிறார்கள். 'நிலம் கையகப்படுத்தும் செயலை முடிந்த அளவுக்குக் குறைப்பது' என்கிற கொள்கையை அரியானா மாநில அரசு வகுத்துள்ளது. அதை மேலும் செறிவூட்டி நாடு முழுவதும் அமல்படுத்தலாமா என்கிற யோசனையும் இருக்கிறது'' என்று வெளிப்படையாக பேசினார்.
இதையடுத்து, மதுபானம் தொடர்பான பேச்சுக்கள் வந்து விழ, அது இந்திய இளைஞர்களை சீரழிப்பதாக பலரும் குமுறினர். அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு கள் இயக்க, கள ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி, ''உச்ச நீதிமன்ற கருத்துப்படி, கள் என்பது ஒரு உணவு. ஆனால், அதை விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்துவிட்டு, வெளிநாட்டு மது ரகங்களை அரசு விற்பனை செய்கிறது. கள் தவிர, அனைத்து மது வகைகளையும் தடை செய்ய வேண்டும்'' என்று ஆணித்தரமான கருத்துக்களை எடுத்து வைத்தார்.
உடனே...''உங்கள் கையிலிருக்கும் மனுவை என்னிடம் முதலில் கொடுங்கள். டெல்லிக்குப் போனதும் உங்கள் கருத்துக்களை அரசு பொறுப்பில் இருக்கிறவர்களிடம் பேசுகிறேன்!'' என்று ஆர்வத்தோடு வாங்கிக் கொண்டார் ராகுல்!
புதிய பாதை போட முயற்சிக்கிறார் ராகுல். பழம் தின்று கொட்டைபோட்ட அரசியல்வாதிகளை மீறி, இவரால் இதையெல்லாம் சாதிக்க முடிந்தால்... நல்லதுதானே!
நன்றி விகடன்
No comments:
Post a Comment